Monday, December 28, 2015

என்ன சொல்ல!!!

இன்று என் மகள் தருணிகாவின் பெயரைப் பதிவு செய்ய சிங்காநல்லூர் மாநகராட்சி அலுவலகம் சென்றேன்.இணையத்திலும் பிறப்பு பற்றிய விவரங்களைப் பதிவேற்றியிருக்கிறார்கள் சில பல தவறுகளோடு.முக்கியமாக Initial தவறுகள் அதிகம்.தாய் தந்தையின் பெயர்களில் Initial  தவறுகள் அதிகம்.இது எதேச்சையாக நடந்தது போல இல்லை.நம்மிடம் காசு பார்க்கும் தந்திரம்.இல்லையென்றால்தான் இணையத்திலேயே பதிவிறக்கம் செய்துவிடுவோமே.. அரசுத்துறை அரசுத்துறைதான்..

Saturday, November 14, 2015

ஒரு பயணமும் நினைவுகளும்..

நண்பர் சங்கர் திருமணத்திற்காக நண்பர்களுடன் திருச்சி சென்று கொண்டிருக்கிறேன்.அரசுப் பேருந்தில் ரஜினிகாந்தின் 90 களின் ஹிட் பாடல்களுடன் இரவின் மடியில் பயணம்.பயணிகள் ஒவ்வொருவரும் தனித்த சாயல் கொண்டவர்களாக இருப்பது அதிசயமே.மழைத்தூறல் இரவுக்கு அழகு சேர்க்கிறது.மழையில் நனைந்த சாலை நீண்டு கிடக்கிறது.பேருந்தில் பயணிகள் குளிரோடு சிறிய யுத்தமே நடத்துகிறார்கள்.குளிரே வெல்கிறது.பேருந்தில் அதுவும் இரவுப் பயணம் வாழ்வில் வரம் என்பதை இந்தப் பயணம் மறுபடியும் நிரூபிக்கிறது.கிராமங்களும்,நகரங்களும் வியப்பை ஏற்படுத்தியபடியே கடக்கின்றன ஏதேதோ பழைய நினைவுகளைக் கிளறியபடி.வாழ்க்கை சுழற்றியடிப்பதில் பலவற்றை யாருக்கும் சொல்லாமலே கடக்கிறோம்.மனதில் பாரம் சற்றே  அதிகரிப்பதோ,குறைவதோ நடக்கிறது... 

Monday, November 9, 2015

மழை

அரசியல்வாதிக்கு காட்டுவது கருப்புக் கொடி.மழைக்கு நாம் காட்டுவது கருப்புக் குடை.மழை வேண்டுமென்று தவளைக்கு கல்யாணம் செய்வது ஒரு பக்கம்,யாகம் செய்வது மறுபக்கம்.மழை வந்தாலோ வருண பகவானிடம் ஒரு மணி நேரம் மழையை நிறுத்தச் சொல்லி பெட்டிஷன் போடுவதும்,சண்டை போடுவதும் நாம்தான்.விவசாயிகள் வேண்டுவது மழைதான்.ரமணன் நம் குடும்பத்தில் ஒருவரானதும் மழையால்தான்.நம் சாலைகள் பல்லைக் காட்டுவதும் மழையால்தான்.கொசுக்கள் மழைக்கு நன்றி சொல்கின்றன.மருத்துவர்களும்  நன்றி சொல்கின்றனர்.மாணவர்களும்தான்.இப்படி வரங்களையும் சாபங்களையும் ஒரு சேரப் பெறும் மழை தற்போது பெய்து கொண்டிருக்கிறது தன்னியல்போடு.. ரசிப்போம் மழையை..

Sunday, November 8, 2015

என்னுரை..

தமிழுக்கு அமுதென்று பேர்..பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தன் வளமை குன்றாத தமிழ் மொழியில் எழுதுவது எனக்குப் பெருமை..